ஒருசமயம் இரண்டு முனிவர்கள் யாத்திரையாக இத்தலத்திற்கு வந்தபோது கரும்புக் காடு சூழ்ந்த இந்த இடத்தில் இறைவனைக் கண்டு வழிபட்டார்கள். ஒரு முனிவர் இது கரும்பு வனம் என்றும் மற்றொருவர் இங்கு நந்தியாவட்டை இருப்பதால் வெண்ணி என்றும் அழைத்தனர். அப்போது இறைவன் அசரீரியாக இரண்டும் எனது பெயரிலும், ஊரின் பெயரிலும் இருக்கட்டும் என்று அருளினார். அன்று முதல் இத்தலம் 'கோயில் வெண்ணி' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'வெண்ணிகரும்பேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், பெரிய வடிவிலான லிங்க மூர்த்தியாக காட்சி தருகின்றார். கரும்புகளை ஒன்றாக இணைத்ததுபோல் இருக்கிறார். அம்பாள் 'சௌந்தர்ய நாயகி' என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றாள். 'அழகிய நாயகி' என்றும் அழைக்கின்றனர்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், மகாலட்சுமி, பைரவர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன.
கரிகாலச் சோழன் தமது இளவயதில் சேர, பாண்டிய மன்னர்களை எதிர்த்து போரிடச் சென்றபோது இத்தலத்தில் உள்ள பிடாரி அம்மனை வழிபட்டுச் சென்று வெற்றி பெற்றதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
பங்குனி மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில் மூலவர் மீது சூரியனின் கதிர்கள் விழுந்து சூரிய பூஜை நடைபெறுகிறது.
முசுகுந்த சக்கரவர்த்தி, சூரியன் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|